சாகாவரத்தை அடைய விரும்பிய தேவர்கள், பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தீர்மானித்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையும் பணி துவங்கியது. அங்குமிங்கும் கடைந்த போது, வலி தாளாமல் வாசுகி விஷத்தைக் கக்கியது. உலகம் அழியுமோ என்ற பயத்தில் தேவர்கள் திகைக்க, விஷத்தை ஒரு உருண்டையாக்கி விழுங்கினார் சிவன். பதற்றத்தில் பார்வதி, கணவரின் வயிற்றுக்குள் விஷம் செல்வதைத் தடுக்க அவரது கழுத்தைப் பிடித்தாள். அது கழுத்தில் தங்கியதால் ‘நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். சிவனைத் தன் கொம்புகளுக்கு நடுவில் தாங்கிப் பிடித்தது நந்தி. சிவன் மகிழ்ச்சியுடன் அங்கு நடனம் ஆனார். இதன் அடிப்படையில் கோயில்களில் ‘பிரதோஷ பூஜை’ நடக்கிறது. அபாயத்தில் இருந்து உலகைக் காப்பாற்றிய சிவனுக்கு நன்றி தெரிவிப்பதே இதன் நோக்கம்.