பதிவு செய்த நாள்
02
நவ
2021
07:11
சென்னை-கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், அதை மோசடியாக விற்பதை தடுக்க, சர்வே எண் வாரியாக பட்டாக்களில், தடை குறியீட்டை சேர்க்கும் பணியை வருவாய் துறை துவக்கி உள்ளது. தமிழகம் முழுதும், 44 ஆயிரத்து 285 கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோவில்களுக்கு, பல்வேறு தரப்பினர் தானமாக கொடுத்த நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. ஏராளமான சொத்துக்கள், அந்தந்த பகுதி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, சொத்துக்களை மீட்கும் பணிகளை ஹிந்து சமய அறநிலையத் துறை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்படுவதை தடுக்க, அவற்றின் பட்டாக்களில் சிறப்பு குறியீட்டை ஏற்படுத்தலாம் என ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய் துறைக்கு ஆலோசனை தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், வருவாய் துறையினர் சில அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர்.இதன்படி, சென்னையில் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் பட்டாக்களில், சிறப்பு குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சர்வே எண் தடை செய்யப்பட்டது என்ற வாசகம், அந்த குறியீட்டில் இடம் பெற்றுள்ளது.நகர்ப்புற நில அளவை முடிந்த பகுதிகளில், இந்த நடவடிக்கை துவங்கி உள்ளது. மற்ற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்த வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், சொத்து வாங்குவோர் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், பட்டாவை ஆன்லைன் முறையில் சரிபார்க்கும் போது, தடைக்கான குறியீடு இருந்தால் விற்பனை நடக்காது. கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில், மிக முக்கிய முன்னேற்றம் இது என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.