பதிவு செய்த நாள்
07
நவ
2021
03:11
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மனின் கோலாட்ட இசைக்கு மயங்கி மேய்ச்சலில் இருந்த பசுக்கள் அம்மன் முன் ஐக்கியமான நாளே கோலாட்ட விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல், வைகாசி, கோலாட்ட உற்ஸவம், களியாட்ட திருவிழா என ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தி இந்நகர் மக்கள் அம்மனை குளிர்வித்து வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர்.ஐப்பசியில் நடக்கும் கோலாட்ட உற்ஸவ விழா நவ., 5ல் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கோயில் வளாகத்தில் புறப்பாடு நடக்கும். நவ.,13 அன்று பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடி கண்ணுடைய நாயகி முன் வழிபாடு செய்து, ஐதீகமாக தயாரித்து வைத்துள்ள பசு, கன்றுவின் மண்ணால் ஆன சிலையை தெப்பக்குளத்தில் கரைத்துவிடுவர்.கோலாட்ட இசைக்கு மயங்கிய பசுக்கள்எம்.நடராஜன், பூஜாரி, நாட்டரசன்கோட்டை: கோலாட்ட பள்ளு பாட்டு பாடி கண்ணுடைய நாயகி அம்மன் கோலாட்ட குச்சியை வைத்து நடனமாடினார். அப்போது அம்மனின் இசைக்கு மயங்கி மேய்ச்சலில் இருந்த பசுவும், கன்றுவும் நேரடியாக ஓடி வந்து அம்மனின் காலடியில் படுத்து இசையை ரசித்ததாக ஐதீகம். அதன்படி ஐப்பசி அமாவாசை அன்று மேளதாளம் முழங்க களிமண் எடுத்துவந்து கோயிலில் வைப்பர்.மறுநாள் (பிரதமை திதி அன்று) பசு, கன்றுவை சிலையாக பிடித்து கோயிலில் வைத்து 10 நாட்கள் வழிபாடு செய்வோம். பத்தாம் நாளில் கோலாட்டம் ஆடி பசு, கன்று சிலையை தெப்பக்குளத்தில் கரைத்து விடுவோம். இப்படி செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து நல் ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை. இதற்காகவே ஆண்டுதோறும் கோலாட்ட உற்ஸவம் நடத்துகிறோம், என்றார்.