புதுச்சேரி : ஹஜ் பயணிகள் விவகாரத்தில் பழைய நிலை தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் சென்னை விமானம் மூலமாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் புதுச்சேரி, தமிழக பகுதி ஹஜ் பயணி களுக்கான சென்னை விமான பயண முறை ரத்து செய்யப்பட்டு விட்டது.இனி கொச்சி விமான நிலையத்திலிருந்து தான் ஹஜ் பயணிகள் செல்ல வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மற்றும் புதுச்சேரி, மாகி பகுதியைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் கொச்சி சென்று தான் பயணிக்க முடியும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து பேசினேன். புதுச்சேரி மாநிலம் மற்றும் தமிழக ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்லக் கூடிய பழைய நிலைமையை கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இவ்விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பழைய நிலையே தொடர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடிதம் எழுத வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.