பதிவு செய்த நாள்
08
நவ
2021
11:11
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழனின் 1,036 வது சதய விழாவிற்கான, பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில்,இரண்டு நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விழா சிறப்பாக கொண்டாடப் படவில்லை. எனினும் பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு மட்டும் நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனோ அச்சம் காரணமாக 1036ம் ஆண்டு சதய விழா வருகிற 13ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படுகின்றன. காலை 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால், பேராபிஷேகமும், மகா தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலையுடன் கோவில் பிரகாரத்திற்குள் உலா நடைபெறும். இந்த சதய விழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சதய விழாக்குழு தலைவர் செல்வம், துணைத் தலைவர் மேத்தா, பரம்பரை அறங்காவலர் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை பெரிய கோவில் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் ஊழியர்கள் செய்திருந்தனர்.