பதிவு செய்த நாள்
08
நவ
2021
11:11
தஞ்சாவூர்: காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரதயாத்திரை, நேற்று கும்பகோணம் வந்தடைந்தது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு, காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரதயாத்திரை, கடந்த மாதம் 23ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவேரியில் துவங்கியது. இந்த யாத்திரை காவிரி நதி செல்லும் பாதை வழியாக கடந்து வரும் 10ம் தேதி பூம்புகாரில் நிறைவு பெறுகிறது.
மூத்த துறவி சுவாமி நாகேஸ்வரநந்தா, அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் உள்ளிட்டோர் யாத்திரையில் பங்கேற்று காவிரியின் அனைத்து படித்துறைகளிலும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரை குழுவினரை, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று, காவிரி அன்னைக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று மாலை கும்பகோணம் டபீர் சத்சங்க காவிரி படித்துறையில், காவிரி அன்னை சிலைக்கு வாசனை திரவியங்கள், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தி வழிபாடு நடந்தது. அப்போது காவிரி நதியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மகாமக குளம் படித்துறையிலும் ஆரத்தி வழிபாடு நடந்தது.