பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் உள்ள பாதாள அறைகளில் ஒன்றான "ஏ அறையில், பாதுகாக்கப்பட்டு வரும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கேரளா, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரியவகை பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த அறைகளை திறந்து, அவற்றிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழு, வல்லுனர் குழுவை நியமித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, பாதாள அறைகளை திறந்து அவற்றிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், "எப், "இ, "டி, "சி அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றிலுள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு விட்டன. ஆனால், வைர, வைடூரிய நகைகளை மதிப்பீடு செய்வதற்கான வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள், மதிப்பீட்டு குழுவினரிடம் இல்லாததால், "ஏ அறை திறக்கப்படாமல் இருந்தது.
வல்லுனர்கள் வரவழைப்பு: இந்த அறையில் தங்க, வைர, வைடூரிய, ரத்தின பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு, தோராயமாக 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பல ஆண்டுகளாக கருதப்பட்டு வருகிறது.இந்த அறையில், பத்மநாப சுவாமி பூஜைக்கு பயன்படும் 300க்கும் மேற்பட்ட தங்க குடங்கள், 3,000த்திற்கும் மேற்பட்ட இரட்டை வடம் மற்றும் அதற்கும் மேற்பட்ட வடங்களை கொண்ட தங்க சங்கிலிகள், வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க மாலைகள், தலா 25 கிலோ எடை கொண்ட தங்கத்திலான பெரிய உருளிகள் என, பல விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகள்: தற்போது அந்த அறையை திறந்து, அவற்றிலுள்ள பொருட்களை மதிப்பீடு செய்வதற்கான, நவீன தொழில்நுட்பக் கருவிகள், வல்லுனர்கள், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். "ஏ அறையில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்தவுடன், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் அவை குறித்த அனைத்து விவரங்களும், இஸ்ரோ தயாரித்து அளித்துள்ள கணினியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படும்.வல்லுனர்கள் குழுவுடன் உயர்மட்டக் குழுவினர், சமீபத்தில் கலந்தாலோசித்தனர். இதை அடுத்து, இந்த வாரம், "ஏ அறையை திறப்பது என்றும், அதற்கான தேதி ஓரிரு நாளில் முடிவு செய்யலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.இது தவிர, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள, "பி அறையை திறப்பது எப்போது என்பது, "ஏ அறையில் உள்ள பொக்கிஷ மதிப்பீடு பணிகள் முடிவடைந்து பிறகே தீர்மானிக்கப்படும் என தெரிகிறது. "பி அறை பல ஆண்டுகளாகவே திறக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.