பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், இவ்வாண்டு, இரண்டு பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருமலையில், வரும் செப். 18 முதல், 26 வரை ஆண்டு பிரமோற்சவம், அக். 15 முதல், 23 வரை நவராத்திரி பிரமோற்சவம் நடத்துவதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் பாபிராஜு, நிர்வாக அதிகாரிகள் சுப்பிரமணியம், சீனிவாச ராஜு ஆகியோர் தலைமையில் நடந்தது. பின்னர் தேவஸ்தான தலைவர், பாபிராஜு கூறியதாவது: பிரமோற்சவ வைபவத்தைக் காண திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, இடையூறு ஏற்படாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கைகள், இலவச குடிநீர், தங்கும் வசதி, அன்ன பிரசாதம், சாமி தரிசன வசதிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விழாவைக் காண வரும் பக்தர்களை வரவேற்க, மாநிலம் முழுவதும் வரவேற்பு பேனர்கள் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு சேவை புரிய, நான்காயிரம் பேர் ஸ்ரீவாரி சேவகர்களை பயன்படுத்திக் கொள்ளப்படும். திருமலை மலைப் பகுதியில், விபத்துகளை தவிர்க்க, கருட சேவையன்று, இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். திருப்பதி - திருமலை இடையே போக்குவரத்து வசதிக்காக, அதிக எண்ணிக்கையில் ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படும்.அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு, பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, லக்கேஜ் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்படும். விழாவையொட்டி, திருப்பதியில் இருந்து, திருமலை செல்லும் வழிநெடுகிலும், சுவாமி, தாயார் உருவங்கள் பொறிக்கப்பட்ட அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணிகளும் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பாபிராஜு கூறினார்.