பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெருவுடையநாயகி திருக்கல்யாணம் இன்று (2ம் தேதி) வெகு விமர்சையாக நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் சீர்வரிசைகளுடன் பங்கேற்கவுள்ளனர். தஞ்சை பெரியகோவில் பெருவுடையார், பெருவுடைநாயகி திருக்கல்யாணம் இன்று மாலை ஐந்தரை மணிக்கு நடக்கிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, முன்னதாக சீர்வரிசை பொருட்களான பழங்கள், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம், வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், வெற்றிலை சீவல், இனிப்பு வகைகள் ஆகியவற்றை சொக்கநாதர் சன்னதியிலிருந்து பெண்கள் ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். தொடர்ந்து ஊர்வலம் அம்மன் சன்னதியை அடைந்ததும் ஸ்வாமி அம்பாளுக்கு ஐந்தரை மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு எட்டு மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.