பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், 5ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 5 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை கலசங்கள் வைத்து ருத்ர யாக பூஜை நடந்தது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையும், ருத்ரபாராயணமும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு, பிரதோஷ விழா நடந்தது. சிவபெருமான் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மலர் மற்றும் அருகம்புல்லில் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.45 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. பின்னர், உற்சவர் பள்ளிகொண்டேஸ்வரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.