பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
10:07
திருநெல்வேலி: 35 அடி உயரம், 450 டன் எடை கொண்ட தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் 508வது ஆனித் தேரோட்ட இன்று (2ம் தேதி) கோலாகலமாக நடக்கிறது."திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமான நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே தேர்களில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை பெற்ற நெல்லையப்பர் கோயில் தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28அடி அகலமும் கொண்ட இந்த தேரில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8வது நாளான நேற்று காலை சுவாமி நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தியில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து சுவாமி நடராஜப்பெருமான் பச்சை சாத்தியில் எழுந்தருளி திருவீதியுலா நடந்தது. மாலையில் சுவாமி கங்காள நாதர் தங்கச் சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா நடந்தது. சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதியுலா சென்றனர்.நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் நேற்று மாலை நெல்லை அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், இரவு பாம்பே ஜெயஸ்ரீ குழுவினரின் பக்தி இன்னிசையும் நடந்தது.
இன்று 508வது தேரோட்டம்: ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக மக்கள் வெள்ளத்தினிடையே இனிதே நடைபெற்றது. இன்று நடைபெற்றது 508வது ஆண்டு தேரோட்ட நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., டி.ஆர்.ஓ, எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேரோட்ட திருவிழாவையடுத்து, அங்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விழாக்கோலம் பூண்டது நெல்லை: தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகள் களை கட்டியுள்ளது. கோயில் கோபுரங்கள், கோயில் வளாகம் மற்றும் உட்பகுதிகளில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தேரோட்ட திருவிழாவை பார்க்க பக்தர்கள் குவிந்துள்ளனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நெல்லை மாநகரத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகரத்தில் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு அனைத்து அரசு துறைகளுடன் அறநிலையத்துறை, மாநகராட்சி, போலீசார் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கலை நிகழ்ச்சி: தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஜோதிடர் பாலசுப்பிரமணியன் பக்தி சொற்பொழிவு, வைகிங் எம்.எஸ்.கருணாநிதி பக்தி சொற்பொழிவு, புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜலெட்சுமி கார்மென்ட்ஸ், கோடீஸ்வரன் ஜூவல்லர்ஸ், பாளை., கணேஷ் ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரி, நாகா மைதா, லெட்சுமிவிலாஸ் பாங்க், வைகிங் நெல்லை பனியன் ஏஜென்ஸி நிறுவனத்துடன் நெல்லை கல்சுரல் அகடமி இணைந்து செய்துள்ளது.