பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது.
திருக்கல்யாணம்: விழாவின் முக்கிய நிகழ்வாக, காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று காலை நடந்தது. காலை 10.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமதத்தர் திருமாங்கல்யம் அணிவித்தார். பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் தாம்பூலப் பை வழங்கினர்.
மாங்கனி திருவிழா:இன்று அதிகாலை 3 மணிக்கு, பிச்சாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர், இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், 9 மணிக்கு வேத பாராயணம் முழங்க, பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் புறப்பாடு நடக்கிறது.பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாராதனை செய்து, பின் வீட்டின் மாடிகளில் இருந்து வீசும் வைபவம் நடக்கிறது.அமுது படைத்தல்: மாலை 5 மணிக்கு, அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை, புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு, பரமதத்தர் உணவு அருந்த இல்லத்திற்கு வருதலும், ஒரு மாங்கனியை ருசித்த அவர், மற்றொன்றை கேட்க, புனிதவதியார் இறைவனை வேண்டி மற்றொரு மாங்கனி பெற்றுத் தரும் காட்சி நடக்கிறது.