சபரிமலையில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள்: நிர்வாகம் திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2021 09:11
சபரிமலை : சபரிமலையில், டிச., 1 முதல் தினமும் 50 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் எண்ணிக்கையை 50 ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவசம்போர்டு தரப்பில் எழுப்பப்பட்டது. இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றாலும் கூடுதல் பக்தர்களை சபரிமலை வரச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
தற்போது ஆன்லைன் முன்பதிவில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். டிசம்பருக்குரிய மூன்று நாட்களில் முன்பதிவு எண்ணிக்கையை 35 ஆயிரம் ஆக அதிகரித்த போது முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது. இதனால் நவம்பரில் மழை முடிந்த பின், டிச., 1 முதல் 26 நாட்களிலும், ஜனவரியில் மகரவிளக்கு சீசனிலும் 50 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை பாதையில் 11 மையங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுவாமி அய்யப்பன் ரோடு வழியாக மலையேறும் பக்தர்கள் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாக இறங்க அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை சன்னிதானத்தில் போதிய கடைகள் இல்லாதது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை குறைவு, கொரோனா விதிமுறை, மழை காரணமாக வியாபாரிகள் கடைகளை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஐந்தாவது முறையாக நேற்று 135 கடைகள் ஏலம் விடப்பட்டன. ஆனால் வியாபாரிகளிடம் ஆர்வம் இல்லை. சன்னிதானத்தில் இரண்டு ஓட்டல்கள் மட்டுமே பாதியளவு திறக்கப்பட்டுள்ளன.