கை உடைந்த கிருஷ்ணர் சிலை: கட்டுப்போட்டு தந்த மருத்துவர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2021 10:11
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கோவில் பூஜாரி ஒருவர் அபிஷேகம் செய்யும் போது உடைத்துவிட்ட கிருஷ்ணர் சிலையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் படி அழுதார். அவ்வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.
ஆக்ராவின் அர்ஜுன் நகரில் உள்ள பத்வாரி கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜாரியாக இருப்பவர் லேக் சிங். இவர் இன்று காலை கோயிலில் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்துள்ளார். அப்போது தவறுதலாக கைப்பட்டு கிருஷ்ணரின் விக்ரகம் கீழே விழுந்து, அதன் ஒரு கை உடைந்துள்ளது. இதனால் பதறிப்போன பூஜாரி லேக் சிங், கிருஷ்ணர் விக்ரகத்தை பட்டுத் துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு ஆக்ரா மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அழுதபடி நின்றிருந்தவரிடம் மருத்துவமனை ஊழியர் என்ன விஷயம் என கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணரின் விக்ரகத்தை காட்டி நடந்தவற்றை கூறி கட்டுப்போடும் படி கேட்டுள்ளார். அவர்கள் சிலை செய்யும் இடத்திற்கு செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால் அங்கிருந்து நகராமல் தலையை முட்டிக்கொண்டு கதறி அழுதார். அவரது உணர்வை காயப்படுத்த விரும்பாத தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் குமார் அகர்வால், ஸ்ரீ கிருஷ்ணா என்ற பெயரில் சீட்டு பதிந்து கட்டுப்போட்டு தந்துள்ளார். இச்சம்பவத்தை மருத்துவமனைக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.