பதிவு செய்த நாள்
22
நவ
2021
11:11
பாகூர் : வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததுமான பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மழை நீர் வெளியேற வழியின்றி, பல நாட்களாக தேங்கி நிற்பதால், அதன் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. முதலாம் பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்ட இக்கோவில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இயற்கை சீற்றங்களாலும், முறையாக பராமரிக்க தவறியதாலும், இக்கோவில் சேதமடைந்து போனது. இதனையடுத்து, இக்கோவிலில் புனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.சமதளமாக இருந்த வெளிபிரகாரத்தை, புனரமைப்பு பணியின்போது, 3 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் செங்கற்கள் பதக்கப்பட்டு தரை அமைக்கப்பட்டது. கோவிலுக்குள் இருந்து செல்லும் வடிகால்
வாய்க்காலின் வெளி பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனால், மழை காலங்களில் கோவிலின் வெளி பிரகாரத்தில் மழை நீர் தேங்கி நிற்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது.சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேற வழியின்றி, பல நாட்களாக கோவிலில் தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலை வலம் வரும் பக்தர்கள் வழுக்கி விழுகின்றனர்.குறிப்பாக, கோவிலின் மூலவர் கோபுரத்தை சுற்றி லும் சுமார் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால், கோவிலின் அஸ்திவாரம் வலுவிழந்து, ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.மூலவர் மண்டபம், அர்த்த மண்டபத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, நீர் கசிந்து வருகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நடராஜர் மண்டபம் திறக்கப்படுவதே கிடையாது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால், கோவிலின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.இந்திய அளவில் மிகவும் தொன்மையான கோவில் என்பதால், புதுச்சேரிக்கு வரும் மத்திய, பிற மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் இங்கு சுவாமி தரிசனம் செய்து, செல்கின்றனர். ஆனால், தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் இக்கோவிலை எட்டிக் கூட பார்ப்பது கிடையாது என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவில் இருப்பதால், மாநில அரசால் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.எனவே, மிகவும் தொன்மை வாய்ந்த பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலை முறையாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.