பதிவு செய்த நாள்
23
நவ
2021
09:11
திருப்பதி : ஏழுமலையான் தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்து, மழை காரணமாக திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையால், திருமலை மற்றும் திருப்பதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், திருமலை மலைப்பாதையிலும், அலிபிரி நடைபாதை மார்க்கத்திலும் பயணிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நவம்பர் 18 முதல் 30ம் தேதி வரையிலான நாட்களில், ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து, திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்கு, மற்றொரு நாளில் தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்குகிறது. இதற்காக சிறப்பு மென்பொருளை உருவாக்க உள்ளது. அவர்கள், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இலவச சர்வதரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், வர்ச்சுவல் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவை உள்ளிட்டவற்றுக்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.மேலும், கடந்த சில நாட்களில், தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்கள், 30ம் தேதிக்குள் தரிசனத்திற்கு வந்தால், அவர்களை தரிசனத்திற்கு அனுமதித்து, லட்டு பிரசாதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும், 30ம் தேதிக்கு பிறகு தரிசனத்திற்கு வருவதாக இருந்தால், புதிய மென்பொருள் உருவான பின், அதன் வாயிலாக முன்பதிவு செய்து தான் வரவேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
மண்டபம் இடிந்தது: இதற்கிடையில், சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், திருப்பதி கபில் தீர்த்தம் கரையில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோவிலில், கபில் தீர்த்தத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அப்போது, கல் மண்டபம் ஒன்று உடைந்து விழுந்தது. மேலும், ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னதி அருகே உள்ள மண்டபத்தில் மூன்று துாண்கள் பலமிழந்து உடைந்து விழுந்ததால், அதன் மேற்கூரையும் சேர்ந்து இடிந்து விழுந்தது. அப்போது பக்தர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த இடத்தை தேவஸ்தான செயல் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த மண்டபத்தை சீரமைக்கும் பணியை, துரித கதியில் துவங்கி நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.