துரியோதனன் என்று கூறினாலே அவன் தீமையின் ஒட்டுமொத்த உருவம் என்றுதான் நம் மனதில் ஒரு பிம்பம் தோன்றும். ஆனால் அவனையும் வழிபடுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருந்தாலும் உண்மை. உத்தரகண்டில் பெரும்பாலான பகுதிகளில் பாண்டவர்களுக்கு பெரும் மரியாதை உண்டு. எனினும் உத்தரகண்டில் உள்ள ஜகோல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவுரவர்களைத் தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அவர்கள் துரியோதனனுக்கான கோயிலைக் கட்டியுள்ளனர். ஒரு முறை துரியோதனன் இந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றபோது இதன் இயற்கையான அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசு என்பவரிடம் இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ‘அளிக்கிறேன். ஆனால் இந்தப் பகுதி மக்களை நீ காக்க வேண்டும்’ என்று அந்த தெய்வம் கேட்டுக் கொண்டது. துரியோதனன் அதை ஏற்றுக்கொள்ள இந்த பள்ளத்தாக்கு அவனுக்கு வழங்கப்பட்டது. அவனும் அந்தப் பகுதி மக்களை நல்லபடியாக பார்த்துக் கொண்டான். இதன் காரணமாக கவுரவர்கள் தோற்றபோது அந்தப் பகுதி மக்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். துரியோதனன் இறந்தபோது அவர்களுக்காக அவர்கள் விட்ட கண்ணீர் ஒரு ஏரியாக உருவானது. அதன் பெயர் தமஸ். இந்த வார்த்தைக்குத் துன்பம் என்று பொருள். இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் துரியோதனனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. இந்தப் பகுதி மக்கள் மகாபாரதப் போரில் கவுரவர்கள் தரப்பில் போரிட்டவர்கள். துரியோதனனை வழிபடுவதன் மூலம் தங்களின் முன்னோர்களை மதிப்பதாக கருதுகிறார்கள். என்றாலும் இக்காலத்தில் பலரும் துரியோதனனை அங்கு வழிபடுவதில்லை. சோமேஸ்வரர் என்று அழைக்கப்படும் அங்குள்ள சிவலிங்கத்தையே வழிபடுகிறார்கள். மரத்தாலான இக்கோயில் அழகிய துாண்கள் கொண்டதாக உள்ளது.