பதிவு செய்த நாள்
26
நவ
2021
10:11
திருநெல்வேலி:திருச்செந்துாரில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால், கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தமிழகம் முழுதும் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை 9:00 மணி முதல் பலத்த மழை பெய்தது.துாத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்துார், காயல்பட்டினம், குலசேகரபட்டினம், துாத்துக்குடி ஆகிய கடற்கரையை ஒட்டிய நகரங்களில் இடைவிடாது மழை பெய்தது. திருச்செந்துாரில் மதியம் 12:00 மணி வரை 17 செ.மீ.,யாக இருந்த மழை, மாலை 4:00 மணிக்கு 21 செ.மீ.,யாக உயர்ந்தது.தொடர் மழையால், கோவில் வளாகத்தை மழை நீர் சூழ்ந்தது; கோவிலுக்குள்ளும் மழை நீர் சென்றது. கீழ் பிரகாரத்தில் கடலை பார்த்து, பக்தர்கள் அமரும் இடம் முழுதும் மழை நீரில் மிதந்தது. நாழிக்கிணறு செல்லும் பாதையில் மழைநீர் ஆறாக ஓடியது. நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்ட் கடல் போல் காட்சியளித்தது.
கோவில் வளாகத்தில் நீர் தேங்காதபடி வெளியேற்றும் பணி நடந்தது.திருச்செந்துாரில் ஒரே நாள் பகலில், 10 மணி நேரத்தில் 21 செ.மீ., மழை என்பது வரலாறு காணாததாகும். அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் நேற்று மாலை 4:00 மணி வரை 24 செ.மீ., குலசேகரபட்டினத்தில் 13 செ.மீ., மழை பெய்தது. துாத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் முழுதும் நீர் நிரம்பி காணப்பட்டது. கீழூர் ரயில்வே ஸ்டேஷனிலும் மழை நீர் நிரம்பி நின்றது. வாலசமுத்திரத்தில் ஓடைப் பகுதியில் குடியிருந்தவர்கள் மழை நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலும் நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. நகர பகுதியில் மாலை 4:00 மணி வரை 9 செ.மீ., மழை பெய்தது. முனைஞ்சிப்பட்டியில் பண்டாரம், 40, என்பவரின் 23 ஆடுகள் மின்னல் தாக்கி பலியாகின. நாங்குநேரி, களக்காடு சுற்று வட்டாரங்களில் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. மானுார், தாழையூத்து பகுதியிலும் தொடர் மழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.பள்ளிகளுக்கு விடுமுறைநேற்று காலை துவங்கிய மழை தொடர்ந்ததால், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மதியத்திற்கு பின் விடுமுறை அறிவிக்கப்பட்டது; மாணவர்கள் நனைந்தபடி திரும்பினர்.திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு, ரெட் அலெர்ட் அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.