பதிவு செய்த நாள்
26
நவ
2021
12:11
அவிநாசி: திருப்பூர் அருகே திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், பழமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நிர்வகித்து வருகின்றனர். கோவில் 5.96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நுழைவுவாயில் பகுதியை ஒட்டி, கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், உறவினர் சக்திவேல் மற்றும் தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக, பக்தர்கள் புகார் கூறி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினர்.அதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், கோவிலை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பக்தர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். அமைச்சரின் உத்தரவின்படி, நிலம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், நிலம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டு, செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் அலுவலர்கள், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு ஏக்கர் நிலத்தை நேற்று கையகப்படுத்தி, கம்பி வேலி அமைத்தனர்.