பதிவு செய்த நாள்
26
நவ
2021
12:11
கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னத்தின் பொன்விழாவை முன்னிட்டு, 2019 செப்டம்பர் முதல் ஒரே பாரதம் வெற்றி பாரதம் என்ற நாடுதழுவிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் மனிதர்களை மனிதர்களாய் உயர்த்தும் சுவாமி விவேகானந்தரின் உயிர்துடிப்புள்ள கருத்துக்களை, அதற்கு சிறந்த உதாரணமாக பாறை நினைவாலயம் கட்டப்பட்ட கதையின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது.பாரத மக்கள் ஒன்று பட்டால், எத்தகைய வெற்றி கிடைக்கும் என்பதற்கு பாறை நினைவுச் சின்னமே எடுத்துக்காட்டு.
மதுரையில் ஒரே பாரதம் வெற்றி பாரதம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.விவேகானந்த கேந்திரத்தின்தொண்டர்கள் பல குழுக்களாக பிரிந்து இந்த ஒற்றுமையின் வெற்றியை வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், கல்லுாரிகள் என
சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் பதிவு செய்ய பணியாற்றினர். விவேகானந்தரின் அரிய பணியான, சனாதன தர்மத்தின் ஆன்மிக உயர்வை
உலக அரங்கில் வெளிக்காட்டிய அந்த நிகழ்வை, அதற்காக அவர் செய்த மகிமையை நினைவூட்டும் வகையில் மக்களுக்கு பாறை நினைவுச் சின்னத்தின் கதையை பகிர்ந்து வருகிறோம்.
ஏக்நாத்ஜியின் முயற்சி: சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மூலம் ஒருவர் எந்த உயரத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஏக்நாத்ஜி. அவரது உழைப்பு, கற்பனைக்கு எட்டாத முயற்சி. அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் என் வாழ்நாளில் இந்த நினைவாலயம் அமையாது என கூறினார். ஏக்நாத்ஜி தனது குருவான காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை அணுகி, அவரின் அறிவுறுத்தலில் முதல்வர் பக்தவத்சலத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்தார். கட்சி பேதமின்றி அனைத்து பாராளுமன்ற எம்.பி க்களிடம் பாறை நினைவாலய கட்டுமான பணிக்கு இசைவுக்கடிதம் பெற்றார். அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து அந்தந்த அரசு சார்பில் ரூ.ஒரு லட்சம் நிதி திரட்டினார்.
இதுவே ஒரு தேசிய நினைவுச் சின்னத்திற்கான அடையாளம். சாதாரண மக்களிடம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நன்கொடை பெற்று ரூ.85 லட்சம் சேகரித்தார்.
விவேகானந்த கேந்திரம்: ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்யும், இந்த கல்லால் ஆன நினைவுச் சின்னத்தை நிறுவியதோடு, மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நோக்கத்தோடு, விவேகானந்த கேந்திரம் என்ற சேவை அமைப்பை தொடங்கினார். விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் ஆன்மிக வழிகாட்டியாக பாரத மாதாவின் பாதங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தரின் சமத்துவ பார்வை, மனிதனுள் தெய்வசக்தி, சேவையே சாதனை போன்ற கருத்துக்களால் பல இளைஞர்கள் விழித்து எழ முடிந்தது. விழித்திரு எழுந்திரு; இலக்கை அடையும்வரை நில்லாதே என்பது விவேகானந்தரின் வேதவாக்கு. ஒற்றுமை என்பது நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு முக்கியமான
விஷயம். ஒற்றுமை இல்லாத போதுதான் நம்மை பிறர் ஆண்டார்கள். இந்த ஒற்றுமையை நிலைநாட்டும் முயற்சியில்
விவேகானந்த கேந்திரம் பணி: புரிந்து கொண்டிருக்கிறது. ஏக்நாத்ஜி எல்லோரையும் ஒன்றுபடுத்தி, அவர்களுடைய தியாகத்தையும் சேவையையும் மதித்து, அரிய காரியத்தை நிகழ்த்திவிட்டு சென்றிருக்கிறார். அவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நாளை (நவ. 27) காலை 10:30 மணிக்கு மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் ஒரே பாரதம் வெற்றி பாரதம் நிகழ்ச்சியின் நிறைவு விழா, விவேகானந்த கேந்திர பொன்விழா ஆண்டு துவக்க விழா நடக்கிறது. டாக்டர். எஸ்.கீதா, விவேகானந்த கேந்திரம், மதுரை கிளை