பதிவு செய்த நாள்
27
நவ
2021
11:11
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வாடகை பாக்கி: இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை செலுத்தாமல், கோவில் சொத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் முடிந்த உடன், குத்தகை காலம் காலாவதியாகி விடும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகையை அனுமதித்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால், அனுமதிஇன்றி இருப்பதாக தான் கருத வேண்டும். அனுமதியின்றி ஒருவர் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டால், வாடகை பாக்கியை செலுத்துவதன் வாயிலாக, அவருக்கு குத்தகை உரிமை வந்து விடாது.
அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. கோவில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர் உள்ளனர். எந்த அனுமதியும் பெறாமல், குத்தகைதாரர்கள் வசம் கோவில் சொத்துக்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் முழு திருப்தி இல்லை.துஷ்பிரயோகம்தனி நபர்களுடன், அதிகாரிகள் சிலர் கைகோர்த்து செயல்படுகின்றனர். கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது. இத்தகைய செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கடவுளின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறோம் என்பதை மறந்து விடுகின்றனர்.கோவில் சொத்துக்கள், பக்தர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், பலர் நன்கொடை அளிக்கின்றனர்.
அவர்களின் விருப்பத்தை மதிக்கவில்லை என்றால், அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் பாவம் செய்வதாக கருதப்படுவர். கோவிலில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, தற்போதைய நிலையில், மனுதாரர் குத்தகைதாரர் அல்ல. எனவே, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.