திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் அமைந்துள்ள, சீரடி சாய்பாபா கோவிலில், குருபவுர்ணமி உற்சவ விழா நேற்று நடந்தது. மூலவர் சாய் பாபாவுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை அமைத்து, கணபதி, நவகிரக மற்றும் சுதர்சன ஹோமத்தை, கோவில் குருக்கள் நடத்தினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சத்குரு சாயி பஜனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், நேற்று மாலை 6 மணி வரை தொடர்ந்து, 24 மணி நேரம் அகண்டநாம சங்கீர்த்தனை பஜனை குழுவினரால் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சீரடி சாயி சேவா டிரஸ்ட் நிர்வாகி சாய்சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.