சபரிமலையில் எருமேலி, நீலிமலை பாதைகளை திறக்க அரசுக்கு அழுத்தம் அதி்கரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2021 12:12
சபரிமலை: எருமேலி பெருவழிப்பாதை மற்றும் நீலிமலை பாரம்பரிய பாதைகளில் பக்தர்களை அனுமதிக்க கோரி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் சபரிமலை பயணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பக்தர்களின் பாரம்பரியமான சடங்குகள் மறுக்கப்பட்டுள்ளது. இருமுடியில் கொண்டு செல்லும் நெய் தேங்காயை உடைத்து நெய்யை பக்தரே நேரடியாக அபிேஷகத்துக்கு கொண்டு செல்வார். பின்னர் அதில் ஒரு மூடி தேங்காயை ஆழியில் போட்டு விட்டு ஒரு மூடியை வீட்டுக்கு கொண்டு செல்வார். ஆனால் இப்போது நெய்தேங்காயை கவுண்டர்களில் பெற்றுக் கொண்டு பிரசாத நெய் கொடுக்கின்றனர். பம்பையில் இருந்து நீலிமலை அப்பாச்சிமேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மாவு உருண்டை எறிதல், சபரிபீடத்தில் வெடி வெடித்தல் போன்ற சடங்குகள் செய்ய இயலவில்லை. எருமேலியில் இருந்து அழுதை, கரிமலை பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. நீலிமலை பாதையை திறக்காவிட்டால் வரும் ஐப்பசி ஒன்றாம் தேதி அனைத்து இந்து இயக்கங்களுடன் இணைந்து தடையை மீறி இந்த பாதையில் பயணம் செய்ய போவதாக இந்து இயக்க கூட்டமைப்பு செயல்தலைவர் வல்சன் தில்லங்கேரி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சபரிமலையில் ஆசாரங்களை தகர்க்க பினராயி விஜயன் அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெருவழிப்பாதையை திறக்காவிட்டால் வரும் 17–ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த போவதாக கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவர் விஜிதம்பி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் தடுக்கப்பட்டுள்ள பம்பை குளியல், பலி தர்ப்பணம், பக்தர்களின் நேரடி நெய்யபிேஷகம் போன்றவற்றை அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.