பதிவு செய்த நாள்
10
டிச
2021
12:12
சென்னை: தி.நகர், திருமலை - திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடந்தது.
திருமலை - திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்கு பின், உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.அதே முறையில், சென்னை, தி நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.கடந்த மாதம், 29ம் தேதி பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன் விழா நிறைவு பெற்றது.இதையடுத்து, தி.நகர், தேவஸ்தான தகவல் மையத்தில் நேற்று மாலை புஷ்ப யாகம் துவங்கியது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க, துளசி, சாமந்தி, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, நித்யமல்லி, ஜாதிமுல்லை, தாமரை, ரோஜா, மகிழம், தாழம்பூ உள்ளிட்ட ஆகிய மலர்களால் பத்மாவதி தாயாருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.