ஆதிகேசவ பெருமாள் கோயில் பரிகார பூஜைகள்: மன்னர் குடும்பம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2012 11:07
திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பரிகார பூஜைகள் நடந்தது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கு உள்ள பொக்கிஷங்களை கணக்கீடு செய்து வருகின்றனர். பழமையான இந்த ரகசிய அறைகள் திறக்கப்பட்டதால் ஏதாவது தோஷங்கள் ஏற்படலாம் என்ற ஐயப்பாட்டினை போக்கும் விதமாக கோயில்களில் தேவ பிரசனம் வைக்கப்பட்டது. அனைத்து கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என தேவ பிரசனத்தில் தெரிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயிலில் பரிகார பூஜை நடந்தது. இந்நிலையில் நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும் உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மற்றும் மன்னர் குடும்பத்தினர் பரிகார பூஜை செய்ய வந்தனர். வெள்ளி விளக்கு, நீலபட்டு போன்ற பரிகார பூஜை பொருட்களுடன் மரியாதை செய்தனர். பின் அனைத்து சன்னதியிலும் பூஜைகள் செய்தனர். முன்னதாக கோயிலுக்கு வந்த மன்னர் மற்றும் குடும்பத்தினரை கோயில் மேலாளர் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் சங்கம், சேவா சங்கத்தினர் வரவேற்று பரிகார பூஜையில் கலந்து கொண்டனர்.