மயிலாடுதுறை: குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு முன்னிட்டு காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளி படைத்த கிரகமாக மாறினார். இதனால் சூரியனால் பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது. இதனை அடுத்து சூரியபகவான் குத்தாலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். அதனை போற்றும் வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரி தீர்த்தம் படித்துறையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத சோளீஸ்வரர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ செங்கமல தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில்களில் இருந்து புறப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக காவிரி கரையில் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.