பதிவு செய்த நாள்
13
டிச
2021
10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நாளை அதிகாலை நடை பெறுகிறது.
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும். இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைப் அபிநயத்தோது பாடுவார்கள். இராபத்து துவக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் ஆயிரங்கால் மண்டபம் வருவார். அங்கு 10 நாட்கள் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். பகல் பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டு வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (13ம் தேதி) ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
நாளை பரமபத வாசல் திறப்பு : பரமபத வாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்கிறது. உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு வருவார். காலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். அதன் வழியே அடியார் திருக்கூட்டம் புடை சூழ ஸ்ரீ நம்பெருமாள் வெளிவந்து ஆயிரங்கால் மண்டபம் வந்து சேருவார். அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்த பின் மறு நாள் அதிகாலை புறப்பட்டு மூலஸ்தானம் சேருவார். பரமபத வாசல் திறப்பின் காலை 4.45 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்த பின் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்;ர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகளை அரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும்., இணை ஆணையருமான திரு.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள் உட்பட பலர் செய்து வருகிறார்கள்.
பக்தர்கள் சேவை நேரம் : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நாளை 14-12-2021 அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை முதல் 24 ம் தேதி வரை தரிசனம் செய்ய செல்ல வேண்டிய வழி மற்றும் நேரங்கள் குறித்த விவரங்கள் :
• பரமபத வாசல் மட்டும் செல்பவர்கள் தெற்கு வாசல் ஸ்ரீ ரங்கா ரங்கா கோபுரம் இடது புறம் உள்ள வரிசையில் செல்ல வேண்டும்.
• மூலவர் முத்தங்கி சேவை கட்டணம் மற்றும் கட்டணமில்லை சேவைக்கு செல்பவர்கள் தெற்குவாசல் ஸ்ரீரங்கா ரங்கா கோபுரம் வலதுபுறம் உள்ள வரிசையில் செல்ல வேண்டும்.
• தெற்கு வாசல் ஸ்ரீ ரங்கா ரங்கா கோபுரம் வழியாக உள்ளே சென்று கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் வழியாக வெளியே வர வேண்டும்.
நாளை மறுநாள் (15ம் தேதி) முதல் 24 ம் தேதி வரை தரிசன விவரங்கள் :
• தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரம் நுழைவு அனுமதி அதிகாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, பின்னர் காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை
• கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் நுழைவு அனுமதி மூலவர் முத்தங்கி சேவை கட்டணம் மற்றும் கட்டணமில்லா சேவைக்கு பகல் ஒரு மணி முதல் இரவு 7 மணி வரை
• தாயார் சன்னதி மட்டும் செல்பவர்கள் வடக்கு வாசல் வழியாக சென்று மீண்டும் அதே வழியாக செல்ல வேண்டும்.
• 15 - ம் தேதி முதல் 22ம் தேதி வரை பரமபத வாசலுக்கு, பகல் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
• 21 - ம் தேதி பரமபதவாசல் திறப்பு இல்லை..
• முதலுதவி மையம் நூறு கால் மண்டபம் அருகில் செயல்படுகிறது. இத்தகவல்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
19 ஆண்டுகளுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்தில் பரமபதவாசல் திறப்பு : ஸ்ரீரங்கத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தை பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்ட போது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்ததால் எதைக் கொண்டாடுவது என்று கேள்வி எழுந்தது. அந்த சமயம் ஸ்ரீமணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவர், வைகுந்த ஏகாதசி (பகல் பத்து, இராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் கேட்டு, அவர் நியமனத்தின் படி செயல்படுத்தினார். 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதைப்போல வரும் என அறிந்து, மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினார். அந்த வகையில் இந்த ஆண்டு தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைத்தேர் உற்சவம் நடைபெற்றது. எனவே, மணவாள மாமுனிகள் வகுத்துக் கொடுத்த பாதையில், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுந்த ஏகாதசி வைபவம் டிசம்பர் 3ம் தேதி முதல் தொடங்கி, வரும் டிசம்பர் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஜொலிக்கும் ஆயிரங்கால் மண்டபம் : ஸ்ரீநம்பெருமாள் , பரமபதவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த பின் அங்கு பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். இதற்காக ஆயிரங்கால் மண்டபம், வெளி மணல்வெளி ஆகிய பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஆயிரங்கால் மண்டபம் ஜொலிக்கிறது.