பதிவு செய்த நாள்
13
டிச
2021
06:12
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் உள்ள பர்வதமலையில், 4,560 அடி உயர மலை உச்சியில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. மலையை, மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மேலும், மலையடிவாரத்தில் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள, கரைகண்டீஸ்வரர் கோவிலில் தனுர் மாத உற்சவம் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பர்வதமலை கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்யவும் அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கரைகண்டீஸ்வரர் கோவிலில், சுவாமி மாட வீதி வலம் வரும். பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.