திருக்கோஷ்டியூரில் பகல் பத்து உற்ஸவம் ஜன 3ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2021 11:12
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவமான பகல்பத்து உற்ஸவம் ஜன.3 ல் துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஜன.3 மாலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளுகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கி பெருமாளுக்கு காப்புக் கட்டி பகல் பத்து உற்ஸவம் துவங்குகிறது. தொடர்ந்து பூஜை,ஆராதனைகள் நடந்து ஆழ்வாருக்கு மரியாதை செலுத்தப்படும்.
மறுநாள் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், மாலையில் பூஜைகளும் நடைபெறும். தொடர்ந்து தினசரி பெருமாள் சன்னதி எழுந்தருளி அருள்புரிவார். ஜன.12 ல் திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி, ஆழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும். பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பெருமாள் தென்னமரத்து வீதி எழுந்தருளி பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும். ஜன.13 ல் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு காலையில் பெருமாள் பள்ளி திருக்கோலத்தில் சயன நிலையிலும், மாலையில் அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்திலும் அருள்பாலிப்பார். பின்னர் இரவில் ஏகாந்த அபிேஷகம் நடந்து புறப்பாடு ஆகி பெருமாள் ஆண்டாஸ் சன்னதி அருகில் எழுந்தருளி வேத விண்ணப்பம் செய்யப்படும். ஆழ்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நம்மாழ்வாருக்கு காட்சி அளித்து, சொர்க்கவாசலை பெருமாள் தேவியருடன் கடந்து செல்வார். பின்னர் முன் மண்டபம் எழுந்ருளி நம்மாழ்வாருக்கு மரியாதை அளித்து, பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் தயார் சன்னதி எழுந்தருளுவார். மறுநாள் ராப்பத்து உற்ஸவத்தை முன்னிட்டு காலையில் ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளலும், மாலையில் தினசரி பரமபத வாசலில் பெருமாள் தேவியருடன் எழுந்தருளலும் நடைபெறும். ஜன.22 ல் ராப்பத்து உற்ஸவம் நிறைவடையும்.