பதிவு செய்த நாள்
23
டிச
2021
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம், பக்தர்களுக்கு வினியோகிக்க, பாக்கெட் செய்யும் பணி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் கடந்த நவ., 19ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, ஐந்தரை அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம் கடந்த, 20ல், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை உடன், வேம்பு இலை, கட்டை, தர்ப்பை, மா இலை, மாங்குச்சி கட்டை, அருகம்புல் , வில்வ இலை, கரிகாலகட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் சேர்த்து அதனுடன், சுவாமி அபி ேஷக விபூதி, ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.
பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீப மை பிரசாதத்தை பக்தர்கள் இடுவதால், ஏவல், பில்லி, சூனியம், போன்றவை தாக்காமல், காரிய சித்தி பலன் கிடைக்கிறது என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, பத்து கிராம் கொண்ட தீப மை பிரசாதம், விபூதி, குங்குமம் பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம்.