பதிவு செய்த நாள்
23
டிச
2021
10:12
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஒன்றரை ஆண்டுகளாக சித்சபை மேலேறி நடராஜரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிதம்பர ரகசிய தரினமும் நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனையில் புலம்பி வருகின்றனர். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது. அமெரிக்க ஆய்வில், பூமியின் மையப் பகுதி, சிதம்பரத்தில் துாக்கிய திருவடியுடன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே என குறிப்பிட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகளுக்குரிய சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் சில சம்பவங்கள் பக்தர்கள் மனதை புன்படுத்தும் வகையில் உள்ளது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 2015ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு முன்பு வரை பக்தர்கள், சித்சபையின் மேல் ஏறி நடராஜரை தரிசனம் செய்வர். மேலும், உருவமில்லா அபூர்வ தரிசனமான தங்கத்தால் ஆன வில்வ மாலையுடன் கூடிய ஆகாய சிதம்பரம் ரகசியத்தை நித்ய பூஜை செய்யும் தீட்சிதர், திரை விலக்கி பக்தர்களுக்கு காண்பிப்பார். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஆகம விதி.ஆனால், கும்பாபிஷேகத்திற்கு பின் சித்சபையின் மேல் ஏறும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. சிதம்பர ரகசிய தரிசனம் நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் கேட்டதற்கு, ஆறு கால பூஜை நடைபெறும் வேளைகளில் மட்டும், தீட்சிதர்களால் சிதம்பரம் ரகசியத்திற்கு தீபாராதனை காட்டப்படும். அந்த வேளையில் பக்தர்கள் சித்சபையின் கீழே இருந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என கூறுகின்றனர். ஆனால், கீழே இருந்து சிதம்பரம் ரகசியத்தை தரிசனம் செய்வது மிகுந்த சிரமம். ஏனெனில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் சிதம்பர ரகசியத்தை காண வேண்டும் என்ற பக்தியோடு வருவர். அவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. தற்போது சித்சபை மேலேறவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக சித்சபை மேலேறி நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பும் தீட்சிதர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு பின் படிப்படியாக தளர்வுகள் அறிவித்தபோதும், சித்சபை மேல் ஏறும் வாய்ப்பு மட்டும் வழங்கப்படாமல் உள்ளது என பக்தர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர். கும்பாபிஷேகத்திற்கு பின் சிதம்பர ரகசிய தரிசனம் நின்றுபோனது. கொரோனாவிற்கு பின் சித்சபை மேலேறி சுவாமியை தரிசிக்கும் பாக்கியமும் பறிபோனது.மீண்டும் திரை விலகுமா; சிதம்பர ரகசிய தரிசனம் கிடைக்குமா என பக்தர்கள் மிகவும் வேதனையுடன் நடராஜரை வேண்டி காத்திருக்கின்றனர்.
பக்தர்கள் கடும் அவதி: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவுக்கு, பக்தர்களின் மறியல் போராட்டத்திற்கு பின்பே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் கோவில் நிர்வாகம் விழாவை நடத்தியது. குறிப்பாக தேர் விழாவின் போது, இதுவரை இல்லாத வகையில் இரவு 10:30 மணிக்கு சுவாமியை தேரில் இருந்து இறக்கினர். அதேபோல் ஆருத்ரா தரிசன விழாவிற்காக காலை 11:00 மணி முதல் பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோவிலுக்குள் செல்ல துவங்கினர். மதியம் 2:00 மணியளவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் குவிந்தனர். ஆனால், கோவில் நிர்வாகத்தினர் 6:30 மணிக்கு தரிசன விழாவை நடத்தினர். இதனால் கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் உணவின்றி பசியிலும், இயற்கை உபாதைகளை கழிக்க வெளியேற முடியாமலும் பெரிதும் அவதியடைந்தனர்.