பதிவு செய்த நாள்
23
டிச
2021
12:12
சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாடம்பாக்கத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, பல ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டிருந்தன. அறநிலையத் துறை அதிகாரிகளின் மெத்தனம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, 20 ஆண்டுகளில் பெரும்பாலான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதில், அரசு நிலங்கள், கோவில் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.ஜெயபால், 59, கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து, 2019ல் முதல் முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு அனுப்பிய பதிலில், 1960ம் ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட கோவில் நிலங்களின் விபரங்கள் எதுவும் இல்லை. ஆனால், 2019ம் ஆண்டு அடிப்படையில் கோவிலுக்கு சொந்தமாக புஞ்சை, 48.97, நஞ்சை, 38.61 என, மொத்தம் 87.58 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 2001ல் இந்த நிலங்களுக்கு கணினி பட்டா பெறப்பட்டுள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறை பதில் அளித்தது.
இந்த நிலங்களை தானம் கொடுத்தது யார் என, இரண்டாவது முறையாக கேள்வி எழுப்பியதற்கு, சம்பந்தப்பட்ட நில ஆவணங்கள் கோவிலில் இல்லை. வருவாய் துறை ஆவணங்கள் வாயிலாக நிலங்கள் பராமரிக்கப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டது.
வருவாய் துறையில் விசாரித்தபோது, 87.58 ஏக்கர் நிலங்களும் வெவ்வேறு நிலை அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்து, கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
அவற்றின் பட்டா தொடர்பான தகவலை, வருவாய்த் துறை இணையதளத்தில் பார்த்த போது, 2001 முதல் 2015 வரை, 72.90 ஏக்கர் நிலங்களுக்கு கணினி பட்டா கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. மீதமுள்ள 14.68 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா கொடுக்கப்படவில்லை.
மொத்தமுள்ள, 87.58 ஏக்கரில், 72.90 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கோவிலின் பாதுகாப்பில் இருப்பதும், மீதமுள்ள 14.68 ஏக்கர் நிலங்கள் கணக்கில் வராததும் தெரியவந்தது. கேள்விஇந்த நிலங்களின் நிலை குறித்த நிலவரம் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து, மூன்றாவது முறையாக தகவல் அறியும் சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான 72.90 ஏக்கர் நிலங்களில், எத்தனை ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கும், வீட்டு மனைகளாக வாடகைக்கும் விடப்பட்டு, அதற்கு எவ்வளவு வரி மற்றும் வாடகை வசூலிக்கப்படுகிறது என, கேள்வி எழுப்பினேன். இதற்கு, கோவில் நிலங்கள் 42 பேருக்கு குத்தகைக்கும், 22 பேருக்கு வீட்டு மனைகளாக வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாகவும், அவர்களது பெயர் மற்றும் சர்வே எண்களுடன் கூடிய விபரம் பதிலாக அளிக்கப்பட்டது. ஆனால், எந்த தேதியில் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டது; அதற்கு வசூலிக்கப்படும் வாடகை மற்றும் வரி விபரம் பற்றிய தகவல்கள் அளிக்கப்படவில்லை.அது குறித்து நான்காவது முறையாக கேள்வி எழுப்பியதற்கு, எந்த பதிலும் இல்லை. மாநில தகவல் ஆணையம் வரை மேல் முறையீடு செய்தும், இன்று வரை பதில் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 1960ம் ஆண்டுக்கு முன்பிருந்து 2001க்கு முன்பு வரை, கோவிலுக்கு தானமாக எழுதி கொடுக்கப்பட்ட நிலங்கள், ஆவணங்களின்றி மாயமாகி இருப்பது தெளிவாகிறது.
கோவில் நிர்வாகி ஒருவரும், ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர் ஒருவரும் இணைந்து, வருவாய் துறை, அ பதிவேட்டில், கோவில் நிலம் என பதிவாகி உள்ள சர்வே எண்கள்: 612, 613, 615 மற்றும் 627க்குட்பட்ட, பல ஏக்கர் கோவில் நிலங்களை தங்களது உறவினர்கள் பெயரில் பதிவு செய்து, பட்டா பெற்று வைத்து உள்ளனர். கோவில் நிலங்கள் மாயமானது குறித்த இந்த மெகா முறைகேடு குறித்து, முதல்வரின் தனிப்பிரிவு, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரித்தால், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆண்டவன் சொத்தை மீட்க வழிவகை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.