சபரிமலை: தங்க அங்கி வருகையை ஒட்டி, பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு மலை ஏறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிஉள்ளது.டிச., 22-ல் ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி நாளை மதியம் பம்பை வந்தடையும். பம்பையில் கணபதி கோவிலின் முன்புறம் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்ட பின், சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும். இதனால் மதியம் 2:00 மணி முதல் தங்க அங்கி சரங்குத்தி வந்து சேரும் வரை, பக்தர்கள் பம்பையிலிருந்து மலையேற முடியாது. அதுபோல மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின், தங்க அங்கி வந்து தீபாராதனை நடந்து முடிந்த பின்னரே பதினெட்டாம் படியேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
பிரசாதம்: இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், சபரிமலையில் மீண்டும் 24 மணிநேர பிரசாத வினியோகம் துவங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டும், இந்த சீசனில் நேற்று முன்தினம் வரையிலும் நடை அடைக்கும் போது பிரசாத கவுன்டர்கள் மூடப்பட்டிருந்தன.