சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2021 11:12
சபரிமலை: சபரிமலையில் நேற்று மதியம் நடந்த மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மண்டல பூஜை நடைபெற்றது.
இதற்காக அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 10:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் சுற்றுப் புறங்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஸ்ரீ கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் சந்தனம் பூஜை செய்து தங்க குடத்தில் நிறைத்தார். தொடர்ந்து மேளதாளத்துடன் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, தேவசம்போர்டு அதிகாரிகள் சந்தனத்தை பவனியாக எடுத்து வந்தனர். ஸ்ரீ கோயிலுக்குள் சென்றதும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் சந்தனத்தை அபிஷேகம் செய்தார்தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது. பூஜை முடிந்ததும் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜையை தரிசிக்க அதிகாலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மாலை 4:00 மணிக்கு நடை திறந்தது. மாலை 6:30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். டிச.31 அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.