பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
10:07
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் விரைவில் தங்கத் தேரோட்டம் நடத்த வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோபி அருகே மிக பழமையும், வரலாற்று சிறப்பு மிக்க பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் சிவாலயம் மற்றும் ஆதிநாராயண பெருமாள் கோவில் உள்ளன. பாரியூர் அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா சிறப்புடையது. இம்மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு தரிசிக்கின்றனர்.முத்து பல்லக்கு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்வாமி வழிப்பாடு செய்கின்றனர். இக்கோவில் எட்டு கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, 160 கிலோ செம்பு ஆகிய கலவையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஃபிப்ரவரி மாதம் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடந்தது. பின், கோவில் அறைக்குள் வைத்து பூட்டப்பட்டு, மீண்டும் இயக்கப்படவில்லை. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் அமைத்து, அம்மன் உலா வராததால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் உதவியோடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் கோபுரத்தை சுற்றிலும் சலவை கல் பதித்தனர். தங்க தேர் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதலாக இரும்பு கதவு ஒன்று மேலும் அமைக்கப்பட்டு வருகிறது. தங்க தேர் ஓடும் அளவுக்கு நடைபாதை அமைந்துள்ளதால் தங்க தேரோட்டத்தை விரைவில் இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.