சபரிமலை : மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய் அபிஷேகம் துவங்க உள்ளது.
கேரள மாநிலம் எருமேலியில் இருந்து பம்பைக்கு வரும் பெருவழிப்பாதையில், பக்தர்களை அனுமதிக்க வசதிகள் செய்யப்பட்டு, இறுதி கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. நாளை முதல் இந்த பாதையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகரவிளக்கு கால பூஜையை முன்னிட்டு, இன்று மாலை 5:00 மணிக்கு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்து விளக்கேற்றவுள்ளார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜன.14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும். ஜன.,11ல் எருமேலி பேட்டை துள்ளலும், 12ல் பந்தளத்தில் இருந்து திருவாபரண புறப்பாடும் நடக்கவுள்ளன.