பதிவு செய்த நாள்
30
டிச
2021
03:12
நால்வரும் ஞானிகளாவர்
திருவள்ளுவரின் திருக்குறள், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவாரம், பரஞ்ஜோதி முனிவர் மெய்கண்டாருக்கு உபதேசித்த சிவஞானபோதம், மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையார், திருவாசகம், திருமூலரின் திருமந்திரம் ஆகிய அனைத்தும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன என்கிறார் அவ்வையார்,
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
இந்த ‘நல்வழி’ பாடலில் இருந்து வேதத்தின் விளக்கமாக தேவாரம், திருவாசக பாடல்கள் உள்ளன என்பது உறுதியாகிறது.
முருகனைப் போல ஞானசம்பந்தரும் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என்னும் உலகம் அறியாத செய்தியை வள்ளலார் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய திருஞானசம்பந்தர் வேதங்களின் அடிப்படையிலேயே தேவார பாடல்களை பாடியுள்ளார்.
அப்பர் தேவாரமான திருவன்னியூர் பதிகத்தில் அடங்கியுள்ள கருத்துக்களாவன:
நடராஜர் ஞான மார்க்கத்தைக் காட்டுவார். முத்தி அடையும் நெறியைக் காட்டுவார். ஞானத்தவம் செய்து தம்மை அடைந்தோர்க்கெல்லாம், நெற்றி நடுநிலையில் பிரம்மரந்திரத்தின் உள்ளே தாம் குடிகொண்டிருக்கும் இடத்தைக் காட்டுவார். துரியாதீத நிலையில் விளங்கும் தம் திருவடியாகிய உயிரின் சொரூபத்தை அடைந்தவர்களுக்கு சூக்கும சரீரம், உயிரின் சொரூபத்தோடு ஐக்கியமடையச் செய்து முக்தி அடைந்ததன் அடையாளமாக உச்சிக்குழி, குழந்தைப் பருவத்தில் இருந்ததைப் போல மீண்டும் திறந்து கொள்ளச் செய்வார்.
ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானம் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம்
தானம் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு
வானம் காட்டுவர் போல்வன்னி யூரரே
சுந்தரரின் திருக்கானப்பேர் பாடலில் அமைந்துள்ள கருத்துக்களாவன:
ஞானிகளுக்கு எளியவனாகிய ஜோதி சொரூபனை நுண்ணிய துவாரமான பிரம்மரந்திரத்தினுள்ளே இருப்பவனை – துாய வேதப்பொருளாகிய திருவடி என்னும் ஜீவஜோதி சொரூபனை – திருப்பாற்கடலில் இருந்து எழுந்த ஆலகால விஷத்தை அருந்து இறவாமல் என்றும் நிலைத்திருப்பவனை – பிரமனும் திருமாலும் உணராதவனை தேவர்களுக்கெல்லாம் ஆகமநுால் மொழியும் ஆதிபகவனை மேன்மையான கழல் அணிந்த ஞான சொரூபனை – வானவர் தலைவனை, திருக்கானப்பேருறை சிவனைச் சென்றடைவது எந்நாளோ...
தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
துாய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நுால்மொழியும்
ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
தேவாரம் பாடிய மூவரைப் போலவே, திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும் தமது ஞானத்தவத்தின் விளைவாய்ப் பிரம்மரந்திரத்திலுள்ள நடராஜர் தம்முடைய பிறப்பை அறுத்து ஆட்கொண்டதாக திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பாடலில் விளக்கியுள்ளார்:
உச்சிக்குழி முதல் உள் நாக்கு வரை நீண்டுள்ள பிரம்மரந்திரத்தில், ஞானக்கரும்பின் தெளிந்த பாகாகவும், நாடுதற்கரிய முத்தியளிக்கும் பொருளாகவும், தேனைப் போன்றும் பழச்சுவையைப் போன்றும் விளங்கி, என் பிறப்பை அறுத்து ஆட்கொண்ட நடராஜரை நாவார வாழ்த்திப்பாடி அழகிய பெண்களே பொற்சுண்ணம் இடிப்பீராக.
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற்சுண்ணம் இடித்துநாமே
இந்த ஆதாரங்களில் இருந்து அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் வேதங்களின் வழிநின்று தவம் செய்து பிறப்பை அறுத்த ஞானிகள் என்பதை அறியலாம்.