பழநி மலைக்கோயிலில் ஜூலைக்குள் கும்பாபிஷேகம்: அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2022 11:01
பழநி : பழநி மலைக் கோயில் கும்பாபிஷேகம் ஜூலைக்குள் நடைபெறும் என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பழநி கோயிலுக்கு நேற்று வந்த சேகர்பாபு நாதஸ்வரம், தவில் கல்லுாரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு நாதஸ்வரம், தவில், சான்றிதழ்கள் வழங்கினார். பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மலைக்கோயிலில் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்தபின், அன்னதான திட்டம், மனநல காப்பகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: பழநி மலைக்கோயிலில் திருப்பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகிறது. ஜூன், ஜூலைக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் 651 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. பழநியில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் முதியோருக்கான தங்கும் விடுதி கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் மேலும் ஒரு அன்னதானக் கூடம், மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது. தற்காலிக சித்த மருத்துவமனை சில மாதங்களில் துவங்கப்படும். பின்னர் சித்த மருத்துவ கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும் என்றார்.