நத்தம்: நத்தம் அருகே மணக்காட்டூரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நத்தம் அருகே மணக்காட்டூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையுடன் பால், பழம் , பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அய்யனார் தீர்த்தம் அழைத்துவரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி வைத்து வணங்கி , தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இருமுடி கட்டி அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் ரதவீதி உலா கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. பூக்குழி இறங்கும் முன் ஐயப்ப பக்தர்கள் பாலாற்றில் புனித நீராடினர்.பின்னர் குருசாமி முதலில் பூக்குழி இறங்க 40க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பூக்கி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.