சபரிமலை : ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பக்தர், 750 கி.மீ., துாரம் நடந்து வந்து சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்தவர் சுரேஷ். நகைக்கடை தொழிலாளி. மாற்றுத் திறனாளியான இவர், மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்தார். அவர் செப்., 20ல் நெல்லுாரில் இருந்து புறப்பட்டார். ஊன்றுகோல் உதவியுடன் ஒற்றைக்காலில் 750 கி.மீ. துாரம் நடந்து, நேற்று சன்னிதானம் வந்தார். அவருக்கு படியேற போலீசார் உதவி செய்தனர். பின் சிறப்பு தரிசனத்துக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் உதவினர். தரிசனத்துக்கு உதவி செய்த அதிகாரிகளுக்கு நன்றி, என, சுரேஷ் குறிப்பிட்டார்.