பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்டது ராமாயணம். இதில் சுந்தர காண்டத்திற்கு பெருமை மிக அதிகம். ‘சுந்தரம்’ என்றால் ‘அழகு’. தன் மனைவியாகிய சீதையைப் பிரிந்து வருந்திய ராமனுக்கு அனுமன் மூலம் நல்ல செய்தி கிடைத்தது இந்தக் காண்டத்தில் தான். சொல்லின் செல்வனும் சுந்தரனுமாகிய அனுமனின் வீரதீரங்கள் வெளிப்பட்டது இப்பகுதியில் தான். அசோகவனத்தில் தனிமையில் வாடிய சீதைக்கு, “கருணையே உருவான ராமர் இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்” என நல்ல செய்தி கிடைத்தது இந்த காண்டத்தில் தான். ராமாயணத்தின் இப்பகுதி மந்திரத்தன்மை கொண்டது. இதைப் படிப்பவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். சுந்தரகாண்டத்தை படித்தால் துன்பத்தைப் போக்க அனுமன் ஓடோடி வருவார்.