சீதையைத் தேடி கடலைக் கடந்த அனுமன் இலங்கையில் கால் பதித்த இடம் நுவரேலியா. இங்குள்ள ராம்போத அனுமன் கோயிலில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி 12 நாள் திருவிழா நடக்கிறது. மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு நடக்கும் மோதிர திருவிழா புகழ் மிக்கது. 1980ல் சுவாமி சின்மயானந்தர் நுவரேலியாவில் உள்ள காயத்ரி பீடத்திற்குச் சென்றார். அவர் பயணித்த கார் வழியில் பழுதாகி நின்றது. பயணம் தடைபட்ட நேரத்தில் சுவாமிகள் அந்த இடத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அனுமன் ஒப்பற்ற சக்தி அப்பகுதி முழுவதும் பரவியிருந்தது. இலங்கையில் முதன் முதலாக அனுமனின் பாதம் பதித்த இடம் இது என்பதை அறிந்து மகிழ்ந்தார். அப்பகுதியில் அனுமன் கோயில் கட்ட முடிவு செய்தார். 3200 அடி உயரமுள்ள விவேந்தன் மலைப்பகுதியான இங்கு 10 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த இடத்திற்கு ‘ராம்போத’ எனப் பெயர் சூட்டினார். ‘ராமர் படை அல்லது ராமர் சக்தி’ என்பது பொருள். கண்டியில் இருந்து நுவரேலியாவுக்குச் செல்லும் பிரதான சாலையில் இப்பகுதி உள்ளது. மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பி முத்தையாவிடம் 16 அடி உயர அனுமன் சிலை செய்யும் பணியை ஒப்படைத்தனர். கருவறையில் சிலையை நிறுவிய பின்னரே கோயில் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். 2001ஏப்.8 ல் கும்பாபிஷேகம் நடந்தது. வேண்டியதை தரும் சக்தி மிக்க இந்த அனுமனுக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தி வழிபடுகின்றனர். ராமரின் நினைவாக சீதை வைத்திருந்த கணையாழியை (மோதிரம்) அனுமனுக்கு கொடுத்ததன் அடிப்படையில் இக்கோயிலில் மாசி ஏகாதசியில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். ஏழாம் நாளன்று மோதிரம் வாங்கும் வைபவம் நடக்கும். இதை தரிசிக்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழும் பேறு பெறுவர். எப்படி செல்வது: இலங்கை நுவரேலியாவில் இருந்து 33 கி.மீ., விசேஷ நாள்: பவுர்ணமியன்று அபிேஷகம், மார்கழி அமாவாசை முன்னிட்டு 12 நாள் திருவிழா