பதிவு செய்த நாள்
08
ஜன
2022
05:01
சென்னை:கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப் பட்டுள்ளது. அலுவல் சாரா உறுப்பினர்களாக, 13 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஹிந்து கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், கோவில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்தவும், பிற ஆலோசனைகள் வழங்கவும், புதிய உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழுவை அரசுநியமித்துள்ளது.
குழுவின் தலைவராக முதல்வர், துணை தலைவ ராக அறநிலையத் துறை அமைச்சர், உறுப்பினராக துறை செயலர், உறுப்பினர் செயலராக துறை கமிஷனர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்கள்.அலுவல் சாரா உறுப்பினர்களாக, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார். ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன், சுகிசிவம், கருமுத்து கண்ணன், சத்தியவேல் முருகனார், ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜூன் சந்தானகிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகிய 13 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். இவர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படும்.