பதிவு செய்த நாள்
08
ஜன
2022
05:01
நத்தம், பழனி தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக நடந்து செல்லும் முருகபக்தர்கள், கொரோனா பரவல் காரணமாக அரசு முழு ஊரடங்கு அறிவித்து விடுமோ என்ற அச்சத்தில் முன்னதாகவே பாதயாத்திரையை தொடங்கினர்.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வரும் ஜன,18ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் பல வகையான கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு முழு ஊரடங்கை அறிவித்துவிடுமோ என்ற அச்சத்தில் தைப்பூச திருவிழாவிற்கு செல்லவிருந்த முருக பக்தர்கள், முன்னதாகவே சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விடலாம் என்று, இப்போது இருந்தே பாதயாத்திரையாக நடக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் முன் நத்தம் பகுதியை கடந்து செல்வது வழக்கம். ஆனால் இரவு நேர எதிரொலியின் காரணமாகவே இப்போதிருந்தே சாரைசாரையாக பாதயாத்திரை செல்ல தொடங்கிவிட்டனர்.
இதுகுறித்து பாதயாத்திரை பக்தர்களிடம் கேட்டபோது:
கருப்பசாமி- மதுரை: பாதயாத்திரை செல்ல ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தேன். எப்போதும் தைப்பூசத்திற்கு காவடி எடுத்து சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். ஆனால் தற்போதுள்ள சூழலால் நேர்த்திக் கடனை செலுத்த முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் முன்னதாகவே சென்று முருகனை தரிசிக்கலாம் என்று பாதை யாத்திரை செல்கிறேன். ஆனால் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் நாங்கள் செல்லும் பாதை எல்லாம் மருத்துவ உதவி மற்றும் அன்னதானம்,தண்ணீர் வினியோகம், செய்வார். ஆனால் நாங்கள் முன்னதாக செல்வதால் இந்த உதவிகள் எதுவும் எங்களுக்குக் கிடைக்காத கிடைப்பதில்லை என்றார். மேலும் நாங்கள் மலைக்குச் செல்லும் முன் எந்த வித புது அறிவிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லாமலிருந்தால் மகிழ்ச்சி என்றார்.
பாதயாத்திரை பக்தர் சரிதா- புதுக்கோட்டை மாவட்டம்: நான் 40 நாட்களுக்கு மேல் விரதமிருந்து எங்கள் ஊரிலிருந்து 9 நாட்கள் பாதயாத்திரையாக சென்று பழனியை அடைவோம். ஆனால் தற்போது ஊரடங்கு அச்சத்தின் காரணமாக 7நாட்களில் பழனி சென்று நேர்த்திக்கடனை செலுத்த உள்ளேன். பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களிலேயே எங்களது நடை பணத்தை தொடங்குவோம் . ஆனால் தற்போது இரவு நேர ஊரடங்கு உள்ளதால் பகலிலேயே அதிக நேரம் நடக்கிறோம். மேலும் இரவில் உணவங்களில் அடைக்கப்பட்டிருந்ததால் சாப்பாடு கிடைப்பதில்லை. மேலும் அன்னதானம் வழங்குவதிலும் கட்டுப்பாடு உள்ளதால் தற்போது யாரும் அன்னதானம் வழங்க முன்வருவதில்லை. எனவே அரசு பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.