பதிவு செய்த நாள்
12
ஜன
2022
12:01
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி, மாசிமக தேரோட்டம், புரட்டாசி மாதம் சனிக்கிழமை விழா ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா பிரச்னையால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு, அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம், மக்களிடையே எழுந்தது. இந்நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலில், அதிகாரிகள், ஸ்தலதார், மிராசுதாரர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது. கோயில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ், காரமடை நகராட்சி கமிஷனர் பால்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வேத வியாச சுதர்சன பட்டர் உட்பட பலர் பங்கேற்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 13ஆம் தேதி காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 16 லிருந்து, 18 ம் தேதி வரை பக்தர்களுக்கு கோவிலுக்கு வர அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசி விழா அன்று, சுவாமி வழிபட வரும் பக்தர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம், 2 டேஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சுவாமி செல்லும் சொர்க்கவாசல் வீதி உட்பட நான்கு ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.