பொங்கல் தினத்துக்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை எனப்படும். அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மாதங்களுள் சிறந்தது மார்கழி மாதமாகும். (மாலை) சூடிக்கொடுத்த நாச்சியார் இம்மாத முழுவதும் ஸ்ரீமந் நாராயணனைத் துதித்து நோன்பிருந்து நாடோறும் ஒவ்வொன்றாக முப்பது பாசுரங்களைப் பாடி இறுதி நாளில் நாராயணனைத் திருமணம் புரிந்து வேண்டிய போக போக்கியங்களை அனுபவித்தார். ஆகலின் போகிப் பண்டிகை எனக் கொள்ளப்படுமென்பர். இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது. இன்று போகி பண்டிகையை பழைய பொருட்களை எரித்து, மேளம் அடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.