புதுச்சேரி : புதுச்சேரியில் புகழ்பெற்ற பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு என்கிற வைகுண்ட ஏகாதேசி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமானக் பக்தர்கள் பங்கேற்றனர். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
இதனையொட்டி புதுச்சேரி காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 05.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்கவாசலுக்கு பல்வேறு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவில் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் ஸ்வாமியை வணங்கி சென்றனர். பக்தர்கள் அனைவர்க்கும் பிரசாரம் வழங்கப்பட்டது.