காஞ்சி மஹாபெரியவர் தான் விரதத்தன்று சாப்பிடாமல் இருந்தாலும் மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு வயிறார உணவளிப்பார். மடத்தில் உள்ள மாடு, யானை, ஒட்டகம் என கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் உணவு தரப்படுகிறதா என்பதில் அக்கறையுடன் இருப்பார். ஒருசமயம் யானைக்கு பாகன் உணவளிக்கும் போது அருகில் வந்த பெரியவர், பாத்திரத்தில் இருந்த உணவைக் கண்டு, ‘‘ஏன் கருகிய சாதத்தை யானைக்கு கொடுக்கற, அது எப்படி சாப்பிடும்? நாம சாப்பிடுவோமா இந்த சாதத்தை? இனிமே நல்ல பக்குவமானதை கொடு’’ என்றார். எல்லா உயிர்கள் மீதும் அன்பு என்றால் இதுதான். மஹாபெரியவர் ஒருமுறை காசி யாத்திரை சென்ற போது ஒரு நாயும் கூடவே வந்தது. அதற்கு புத்திசாலித்தனம் அதிகம். பெரியவர் நீராடி ஆசாரத்துடன் பூஜைக்கு வரும் போது அருகில் வராமல் துாரத்தில் நிற்கும், முன்னால் போகும் யானையின் கால்களுக்கு நடுவில் செல்லும். அவர் பூஜை, கடமைகளை முடித்து விட்டு சகஜமாக இருக்கும் போது அவருக்கு அருகில் வரும். பல்லக்கில் செல்லும் போது பல்லக்கின் அடியில் ஓடி வரும். அப்படி ஒரு அபூர்வமான பிறவி அந்த நாய். ஒருமுறை தரிசனத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் அந்த நாயை கல்லால் அடிக்க, அது அவனை கடித்தது. நாய்க்கு வெறி பிடித்ததாக நினைத்த மடத்தின் நிர்வாகி அதை அப்புறப்படுத்த முடிவெடுத்தார். பணியாளர் மூலம் நாயின் கண்களை கருப்புத் துணியால் கட்டி, தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டு விட ஏற்பாடு செய்தார். ஆனால் பணியாளர் மடத்திற்கு திரும்புவதற்கும் முன்பாக காட்டில் விட்ட நாய் மடத்தில் நின்றிருந்தது. இதையறிந்த பெரியவர் ‘ஏன் அப்படி செய்தாய்’ என நிர்வாகியை கண்டித்தார். தினமும் பிைக்ஷக்குச்(உணவை ஏற்கும்) செல்லும் முன்பாக ‘‘நாய்க்கு ஆகாரம் போட்டாச்சா’’ எனக் கேட்பார். நாயும் பெரியவர் பிைக்ஷ ஏற்கும் நாட்களில் சாப்பிடும். அவர் விரதமிருக்கும் நாளில் தானும் சாப்பிடாது. அன்பே வடிவான பெரியவரிடம் மனிதர்கள் மட்டும் தான் பக்தி செலுத்த வேண்டுமா என்ன... வாயில்லா ஜீவன்களும்தான் அன்பு செலுத்தின. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஒருமுறை பண்டரிபுரத்தில் மஹாபெரியவர் இருந்த போது விலை உயர்ந்த சால்வைகளை பக்தர் ஒருவர் காணிக்கை அளித்தார். அவற்றை தொண்டர்(சேவை செய்பவர்) ஓரிடத்தில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் பெரியவர் சால்வைகளைப் பார்த்த போது அதன் மீது பூனைக்குட்டிகள் படுத்திருப்பதைக் கண்டார். அவற்றை தொண்டர் (சேவை செய்பவர்) விரட்ட முயற்சித்தார். ‘‘ஏன் விரட்டற... அது பாட்டுக்கு படுத்திருக்கட்டும்’’ என்றார் பெரியவர். இன்னுமொரு சால்வையை கொண்டு வந்து அவற்றின் மீது போர்த்தச் சொன்னார். ‘பாவம் குழந்தைகளுக்கு குளிர்ரது’ என வருத்தமும் கொண்டார். கும்பகோணம் மடத்தில் மஹாபெரியவர் தங்கியிருந்தார். ஒருநாள் நள்ளிரவில் பெரியவரின் அருகில் படுத்திருந்த தொண்டருக்கு (சேவை செய்பவருக்கு) விழிப்பு வர, அருகில் துாங்கிய பெரியவரைக் காணவில்லை. தியானத்தில் இருப்பாரோ என எழுந்து பார்த்தார். அங்கும் தெரியவில்லை. கவலையுடன் தொண்டர் தன்னுடன் இருந்தவரை எழுப்பினார். ‘‘பெரியவாளைக் காணோமே’’ என்று சொல்ல, இருவரும் அரிக்கேன் விளக்கில் தேட ஆரம்பித்தனர். கொல்லையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் யாரோ ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு அருகில் சென்றனர். சாட்சாத் பெரியவர் தான் படுத்திருந்தார். மாட்டுத்தொழுவத்தில் ஒட்டுத்திண்ணையில் காவியுடை இல்லாமல் கோவணத்துடன் அவர் படுத்திருக்க உடல் முழுவதும் கொசு கடிப்பதைக் கண்டு பதறினர். பேசும் சத்தம் கேட்ட பெரியவர் மெள்ள எழுந்தார். ‘‘எதுக்கு இப்படி கத்தற?’’ எனக் கேட்டார். ‘‘மடத்தில் இவ்வளவு இடமிருக்க பெரியவா இப்படி இங்க வந்து ஏன் படுக்கணும், அதுவும் போத்திக்காம இருக்க ஒரே கொசுவா உங்களை மொய்க்கறது. இத்தன கொசு சேர்ந்து கடிச்சா உடம்பு என்னத்துக்காகும்’’ என புலம்பினர். ‘‘வேற ஒண்ணுமில்ல, நாம எல்லாரும் வயிறார சாப்பிட்டு துாங்கறோம் ஆனா கொசுக்களுக்கு சாப்பாடு என்ன... ரத்தம் தான் அதனால வந்தேன்’’ என்றார். கொசு போன்ற எளிய உயிர்களிடம் கூட பரிவு காட்டிய ஒரே ஜீவன் மஹா பெரியவர் தான்.