பதிவு செய்த நாள்
24
ஜன
2022
03:01
மயிலாடுதுறை: வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று சிறப்பு பூஜைகளுடன் திருப்பணி தொடங்கியது.
குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இளங்கிளை நாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 48 ஆயிரம் மகரிஷிகளுக்கு சுவாமி அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை அளித்த தலமாகும். ஞானசபையில் சுவாமி வீரநடனம் புரிந்ததால் வீரட்டேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கும் சிவபெருமான், யானையை உரித்து சம்ஹாரம் செய்ததால் கஜசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தகைய சிறப்பு பெற்ற வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு பாலாலயம் செய்யப்பட்டது. திருப்பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் இன்று தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் கோபூஜை, மூல மந்திரம், அஸ்திர ஜபம், ஹோமம் மற்றும் பூமி பூஜைகள் நடைபெற்று, திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன், தனித்துணை ஆட்சியர் வேணு, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், ஆடிட்டர் குரு.சம்பத்குமார், இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிகுமார், இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவர் குமரன், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர் இராம.நிரஞ்சன், மாவட்ட பால் வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பணி அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கயல்விழி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.