பதிவு செய்த நாள்
27
ஜன
2022
10:01
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் மூலஸ்தான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
உடுமலையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், தங்களின் காவல்தெய்வமாக போற்றிப்புகழும், அம்மனின், திருவிழாவுக்கும், தேரோட்டத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். திருப்பணிகள்இக்கோவில் கும்பாபிஷேகம், 2008ல் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்ற அடிப்படையில், கடந்தாண்டு கோவில் திருப்பணிகள் துவங்கின. புதிதாக உற்சவ மூர்த்திகளுக்கு சன்னதி, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்கள் புதுப்பித்தல் மற்றும் பஞ்சவர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலை பூஜைகும்பாபிஷேகத்திற்காக, ஸ்ரீ மாரியம்மன் பஞ்ச ஆசன வேதிகை மற்றும் 9 குண்டம், விநாயகப்பெருமான், செல்வமுத்துகுமாரசுவாமி, அஷ்ட நாகர், கொடிமரம், பலி பீடம் ஆகியவற்றுக்கு தலா, ஒரு வேதிகை, ஒரு குண்டம் என, 13 குண்டங்கள், 5 வேதிகைகளுடன் அற்புதமாக யாக சாலை அமைக்கப்பட்டு, கடந்த, 23ம் தேதி, காலை முதல் யாக சாலை பூஜைகள் துவங்கின. பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கும்பங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஸ்ரீ லட்சுமி, துர்கா, தன, சுவாசனி, கன்யா பூஜைகளும், மாலை, 4:45க்கு, கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம் நிகழ்ச்சியும் நடந்தன. நெல்லுக்கடை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்கு, சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தனர். இரவு, 7:45க்கு, யாக சாலை பிரவேசத்துடன் துவங்கி, வேத மந்திரங்கள் முழங்க, முதற்கால யாக வேள்வி துவங்கியது. நேற்று காலை, 6:30க்கு, இரண்டாம் கால யாக வேள்வியும், மாலை, 4:30க்கு, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது.தினமும், காலை, மாலை என யாக சாலையில், சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலை பூஜைகள் சிறப்பாக நடந்து வந்தன. இன்று காலை, 7:35 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை மற்றும் நிறை வேள்வி நடைபெற்றது. காலை, 9:30க்கு, யாத்ரா ஹோமம், கடம் புறப்பாடு நிகழ்சி நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு, மாரியம்மன், சக்தி விநாயகர், செல்வமுத்துக்குமரன், உற்சவர் சன்னதி மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு ஏக காலத்தில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 10:30 மணிக்கு, ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாணம்: இன்று மாலை, 4:30க்கு, சூலத்தேவர் மற்றும் அம்பாள் திருக்கல்யாண உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கிறது. யாக சாலை பூஜைகள் நடந்து வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பங்கேற்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இன்று காலை நடக்கும் கும்பாபிஷேகத்தின் போது, கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. காலை. 11:00 மணிக்கு மேல், கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் அரசு வழிகாட்டுதல் அடிப்படையில், வரிசையாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.